H.A . அஸீஸ் ----அணிந்துரை
பாவலரை மீள்வாசிக்கும் காலம்
சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பாசனையின் போது நண்பர், தீரன். ஆர். எம். நௌஷாத் அவர்கள் என்னிடம்
பின்வரும் கேள்வி ஒன்றை முன் வைத்திருந்தார்:
“உங்களைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல கவிதையின் கூறுகள் அல்லது இயல்புகள்
எவ்வாறு இருக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்...?”
அதற்கு எனது பதில் இவ்வாறு அமைந்திருந்தது:
"பாவலர் பஸீல் காரியப்பர் அவர்கள் ஒரு முறை சொன்னது பளிச்சென ஞாபகத்தில்
நிற்கிறது. ஆத்மாவைத் தொட வேண்டும் ஆத்மாவாகவே பிரவாகிக்க வேண்டும் என்று
சொல்லிவிட்டுஇ கவிதை என்பது பெருகிய உணர்வுகளின் இறுகிய சிறைப்பிடிப்பு
என்றார்கள். (அது) 25 அல்லது 30 வருடங்களுக்கு முன் பாவலர் அவர்கள் சொன்னது. எனது
கருத்தும் அதுவே தான். மேலதிகமாக சில பண்புகளை மட்டும் அவதானித்துள்ளேன். அவற்றில்
ஒன்று எந்தப் பண்புகளையும் கவிதைக்கென்று விசேடமாக மட்டுப் படுத்தாமல்
விடுவதுதான். மற்றது மட்டுப்படுத்தாமல் விடுவது கட்டற்று போய் விடுவதல்ல என்பது.
உண்மையில் சமநிலையை கண்டு பிடிப்பது தான் கவித்துவம் சிறப்புறுவதற்கு வாய்ப்பாக
அமைகிறது."
அது ஒரு மேதாவித்தனமான கருத்தாக அமைந்து விடக்கூடும் என அச்சப்பட்டதுண்டு.
பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களது கவிதைகளை மீள்வாசிப்பு செய்து,
எனது கருத்தை இன்று மீட்டிப் பார்க்கின்ற போது, என்னைப் பொறுத்தவரை இது
அப்பட்டமாக பாவலர் அவர்களுக்கே பொருந்துவது போல் தோன்றுகிறது.
பாவலருடைய கவிதைகளின் சிறப்பம்சம்களில் ஒன்று, தத்துவச் சிக்கல்களிலிருந்து
விடுபட்டு எளிமையான கட்டமைப்புடன் அளவுக்கு மேற்படாத குறியீடுகளுடனும்
படிமங்களுடனும் பிரவாகித்து விடுவதுதான். அது அவரது படைப்புகளின் கவித்துவச்
செழுமை.
வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாகவும் செறிவாகவும் விபரிக்கும் கவிதைகளின்
படைப்பாளி அவர். விளக்கக் குழப்பங்களும் சிக்கல்களும் அவரது கவிதைகளின் இயல்பாக
அமைந்ததில்லை. அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் போதும், பாகுபாடு, அநீதி,
சுரண்டல் என்பவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழும் போதும், வாழ்க்கையின் நிரந்தரமற்ற
தன்மையை எடுத்தியம்பும் போதும், பாவலரின் உண்மைத்தன்மை (genuineness) அவற்றில் பிரதிபலிப்பதை
காணலாம்.
ஒரு விதத்தில்,
அவரது ஆளுமையின் இந்த விசேட தோற்றப் பாடுதான் என்னையும் என் போன்ற இளம் வயதினர்
பலரையும் – நண்பர் நௌஷாத் உட்பட – 1980 களில் அவரை நோக்கி ஈர்த்திருந்தது. அந்தக்
காந்தப்புலத்திலிருந்து இன்னும் மீண்டு வர இயலாதுள்ளது.
அவரது கவிதைகள் எல்லாமே நெஞ்சில் நிலைத்திருப்பவை. மனித உணர்வுகளோடு இரண்டறக்
கலந்து விடுபவை. பொருள்முதல்வாதம், பிரத்தியேகவாதம், அந்நிய வெறுப்பு, வெற்றுணர்வு என்பன மேலோங்கி நிற்கும் சமகாலத்தின் சவால்களுக்கு
எதிர்வினையாற்றத் தக்கவை. மனதை ஆற்றுப் படுத்தும் சக்தி மிக்கவை.
“எதுவாகிலும் வரட்டும்! ஓ நெஞ்சே
எதிர் கொள்ளச் சம்மதமா?”
என்று தொடங்கும் வரிகளில் அமைந்த அவரது கவிதை, அழுத்தம் மிகுந்த பொழுதுகளில் ஊக்கமளித்து (motivation)
மனநிலை மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் கொண்டது. மனதில்
அடிக்கடி இசைத்துக் கொள்ளும் இந்தக் கவிதையில் என்னை மிகவும் ஆட்கொண்ட வரிகள் இவை:
“சத்தியம் சோதனைக்குள் ஆவதுண்டு
அதன்
சரித்திரம் வெற்றியாய்ப் போவதுண்டு
நிச்சயம் ஒருநாள் வாழ்க்கை வெல்லும்
அது
நீ வாழ்ந்த வாழ்க்கையின் தன்மை சொல்லும்”
(1972)
வாழ்க்கை என்பது வளர்ச்சியின் வெளிப்பாடு தான்.
ஒருவர் மரத்தை நடலாம்,
தண்ணீர் ஊற்றலாம், எருவும் இடல்லாம். ஆனால், அதற்கப்பாலும் ஒரு மரத்தின் எல்லா அம்சங்களுடனும்,
அது எவ்வாறு உருப்பெருகிறது என்பது ஒரு விந்தை அல்லவா?
தான் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மகனிடம் “அழுத்தமாய் கால்களை ஊன்றிக் கொள்வாய்
நீ” என அறிவுரை பகிர்ந்து,
“அந்த மரம்
தன் அழகை அது பெறும்
விந்தை நான் அறியேன்
விளக்கம் பெறலாம் நீ” (1990)
என வியம்பும் பொழுது,
அந்த வளர்ச்சியுடன் கூட எழும் உணர்வு நிலைதான் அனுபவம் என்கிறாரா?
அப்படியாயின், அது விளக்க முடியாத உணர்வு நிலை என்பதால் விந்தை எனக் கொள்கிறாரா?
என்றவாறு பல கேள்விகள் எழுவதுண்டு. இனிவரும் சந்ததிகள் அதன்
விந்தையை -- அது மரத்துக்கு மட்டுப் படுத்தப் பட்டதல்ல -- அறிந்து கொள்ள வேண்டும்
எனப் பூடகமாக குறிப்பிடுகிறார் போலும்.
பாவலரின் கவிதைகளில்,
அற்புதமான கருவூலங்களை உள்ளடக்கியவை பல உள்ளன. அவைகளில் “ஹலால்”, “உயிர்” போன்றவை ஆன்மீகக் குணாம்சம் நிறைந்தவை. பெருமளவில்
வாசிப்புக்குள்ளாக்கப் பட்ட கவிதைகளில் அடங்கும். வாழ்க்கையின் நிரந்தரமற்ற
தன்மையை சுட்டும் இக்கவிதைகள் எந்த மனிதரையும் வசீகரிக்கத் தக்கவை.
எனது எப்பொழுதும் முன் செல்ல விழையும் திசையில் ஒத்திணையும் கவிதையாகவும், எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வகையில்
இனவுறவின் முக்கியத்தை உணர்த்தும் கவிதையாகவும் என்னைக் கட்டி வைத்திருப்பது
பாவலரின் “துளசி” ஆகும்.
“அம் மண்கள் கலந்தன;
மனிதரைப் பழித்தன
துளசியின் இலைகள்
என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன” (1994)
எனும் வரிகள் என்னை உந்திக் கொண்டிருப்பவை. நல்லிணக்கத்துக்கு இதைவிட சிறந்த
படிமம் இன்னும் எனக்கு வாய்க்கவில்லை.
இந்த வகையறாவில் குறித்துச் சொல்லக் கூடிய இரண்டு கவிதைகள் "மனங்கள் வெளுத்தே
நாம் பேசிடுவோம்" (1992), "அழகிய மனம்" (1972) என்பனவாகும்.
தீரன் நௌஷாத்,
பாவலர் பஸீல் காரியப்பர் மீது தீராத அன்பும் மரியாதையும் கொண்டவர். அந்த அருட்டுணர்வினால்,
அவர் எழுதியுள்ள, பாவலரின் வாழ்வியலின்
சில முக்கிய கூறுகளைத் தொட்டுச் சொல்லும்
இந்த "அழகான ஒரு சோடிக் கண்கள் " என்ற நூல், காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இது அவரது, கவிதைகளை மீள்வாசிக்கும் தன்மையது. வாசகர்கள் மத்தியில் இந்நூல் நல்வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.
வாழ்த்துக்கள் நண்பனே.
ஏ எல் ஏ அஸீஸ்
இலங்கை வெளிநாட்டுச் சேவை -- முன்னாள் அலுவலர், தூதுவர்;
"ஐந்து கண்டங்களின் மண்" கவிதை நூலாசிரியர். (எச்
ஏ அஸீஸ்)
ஒக்டோபர் 12, 2024
No comments:
Post a Comment