Tuesday, July 14, 2015

நாடறிந்த பாவலர் பஸீல் காரியப்பர்


கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26
SUNDAY FEBRUARY 19,  2012




நாடறிந்த பாவலர் பஸீல் காரியப்பர்



 நினைவில் நிறைந்த “அழகான ஒரு சோடிக்கண்கள்” 
என்ற ஈழத்து மெல்லிசைப் பாடலை
 ஞாபகமூட்டிய உடனேயே இலக்கிய சுவைஞர்களின் இதயங்களில்
 எட்டிப்பார்ப்பவர் பாவலர் பஸில் காரியப்பர்.

1940.05.09 இல் சம்மாந்துறையில் கருக்கொண்டு கல்முனைக்குடியில்
 இருமணம் இணைந்தது முதல் இப்பிரதேசங்களின் கல்வி, சமய, 
இலக்கிய வளர்ச்சிப் படிமங்களில் தன்னை நிலை நிறுத்திக் 
கொண்டார். பதுளை கார்மேல் கொன்வண்ட், கல்முனை பற்றிமா; 
சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலை அட்டாளைச்சேனை
 ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான, 
பாவலர் பற்றிமாவின் தமிழாசான் கே. ஆர். அருளையாவின் 
வழிகாட்டலில் கவியுலகில் அடிவைத்தார்.

பாணந்துறை தொட்டவத்தை கல்லூரி சம்மாந்துறை மகா 
வித்தியாலயம், கொழும்பு சிலேவைலண்ட் ஸாகிறா கல்லூரி, 
சம்மாந்துறை அல் -மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, 
கல்முனைக்குடி அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் என்பவற்றின்
 ஆசிரிய பலத்தினூடாகப் பெற்ற உறவினாலும் பன்மொழி 
ஆளுமையினாலும் பிரதேச மற்றும் தேசிய உள்ளடக்கம் மிக்க
 கவிதைகளை வெளிப்படுத்தலானார்.

1960 களின் பின்னரான தென்கிழக்குப் பிரதேசக் கவிஞர்கள் வட்டத்துள்
 ஒருவரான பாவலர் சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, 
அறவழிக் கீதம், முற்றத்துமல்லிகை, கவிதாஞ்சலி முதலியவைகளில்
 தன் கவிதைகளைப் பதியவைத்தார். உயிர், ஊனக்கலை, அழகான
 ஒரு சோடிக்கண்கள், பிரியதர்ஷினி, சட்டை இரணக்கோல், தங்கம்மா, 
உறவு, சிரி சரி, துளசி, ஹலால் உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கான 
கவிதைகளின் உற்பத்தியாளரானார். 

 பஸில் காரியப்பர்..
சமயப் பார்வை, சமூக விமர்சனம், ஆழமான மனிதாபிமானம், 
கிண்டல் தொனி, பிரதேச வழக்காளுகளும் மொழிப்பாய்ச்சலும் 
அங்கத வெளிப்பாடு, சிறுகதைக்கான வடிவ முதலியன இவரது 
கவிதைகளின் பண்புகளாக இழையோடின. இலங்கை முற்போக்கு 
எழுத்தாளர் சங்கம், இலங்கை இலக்கிய பேரவை, கொழும்பு தமிழ்ச்
 சங்கம் முதலியவைகளினால் நடத்தப்பட்ட போட்டிகளில் பாவலரின்
 உயிர் தங்கத்தாத்தா தங்கம்மா என்பன தேசிய மட்டப் பரிசில்களைத்
 தட்டிச் சென்றன.

1978 இல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் ‘
தங்கம்மா’ பரிசு பெற்ற கையோடு சம்மாந்துறை மக்கள் எடுத்த விழாவில்
 புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை “கவிஞன் தோன்றிவிட்டான். பkல் 
காரியப்பர் கண்டீர்” எனக் கூறி இன்று நிலைத்திருக்கும் ‘பாவலர்’ பட்டம்
 வழங்கி கெளரவித்தமை அவரது எழுத்துக்குக் கிடைத்த உயர் மகுட
மென்றே கூறலாம்.

“நிதானி” என்ற புனைப் பெயருடன் சிலவற்றை எழுதிய காரியப்பர் 
கவியரங்கக் கவிதைகளில் கணீரென முழங்கி பலரின் பாராட்டுத
ல்களைப் பெற்றவர். 2002 இல் இலங்கையில் நடைபெற்ற உலக
 இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பாவலர் தலைமையேற்ற
 கவியரங்கு களைகட்டியதை இவ்விடத்தில் மீட்டிப் பார்க்க முடியும்.
கொழும்பு சிலேவைலண்ட் ஸாஹிறாக் கல்லூரியில் ஆங்கில
 போதனா மொழியுடன் கற்பித்த 5 வருடத்துள் கிடைத்த பத்திரிகை
 மற்றும் இலத்திரனியல் ஊடக அறிமுக உறவினூடாக சில்லையூர்
 செல்வராஜனின் பங்களிப்பில் இலங்கையில் தயாரான ‘நிர்மலா’
 திரைப்படத்திலும் காரியப்பர் தோன்றினார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் மிகவும் பிரபல்யமாகி 1966 தொடக்கம்
 78 வரை பாடலாசிரியர் யாரென அறியப்படாமல் 12 ஆண்டுகள் 
அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த “அழகான ஒரு 
சோடிக் கண்களை” பீ.எச். அப்துல் ஹமீட்டுடனான செவ்வி ஒன்றின்
 மூலமே அறிமுகப்படுத்திய ஆர்ப்பாட்டமில்லாத பாவலர், இன்றைய
 தம்பட்டக்காரர்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.

தொகுதிகள் எதுவுமே போடாமல் இருந்த பாவலரின் 66 கவிதைகளை
 உள்ளடக்கிய “ஆத்மாவின் அலைகள்” கவிதை நூலை தென்கிழக்குப்
 பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2001 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்து
 பாவலரை மேன்மைப்படுத்தியதுடன் வரலாற்றுத்தடத்திலும் அவரை
 நிலை நிறுத்தி வைக்கும் கைங்கரியத்தைச் செய்தது. தமிழ்ச் சங்க 
செயற்பாட்டாளர்களில் ஒருவனாக இருந்து அப்பணியில் பங்கெடுத்தமை
 என்பேறே. இத்தொகுதியில் இடம் பிடித்த ‘தங்கம்மா’ நெடுங்கவிதை 
பழைய பாடத்திட்டத்தின் தரம் 10, 11 இலக்கியத் தொகுப்பிலும் இடம் 
பிடித்து காரியப்பரை மேலும் தேசியமயப்படுத்தின.

“துறை நீலாவணையிலிருந்து
ஒரு துளசிச் செடி கொண்டு வந்தேன்
வேர் நொந்து போகாமல் நீர்வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈரமண்ணெடுத்து
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக் குடி மண்ணைக் கெல்லி
அதன் உள் வைத்தேன். அம்மண்கள் கலந்தன.
மனிதரைப் பழித்தன.
துளசி இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன”

என்ற பாவலரின் ‘துளசி கவிதை காரியப்பர் அனுபவித்த தமிழ் -
 முஸ்லிம் வாழ்வியலைப் படம் போட்டுள்ளது. எதனையும் நிதானித்து
 அனுபவித்துக் கொண்டே பேசும் யதார்த்த வாதியாகவே பாவலர் வலம்
 வந்தார். தன்னைத் தேடி வந்த கெளரவங்களையும் பட்டங்களையும் 
ஒதுக்கிவிட்டே வாழ்ந்தார். தகுதியானவர்களிடமிருந்து கெளரவங்கள்
 வரவேண்டும் என்பதே அவரது கொள்கை தனக்காக அச்சாக்கப்பட்ட 
பாராட்டு மலரில் தன் அனுமதியின்றி இடம்பெற்ற
காலம் கடந்தும் பாவலராகவே மணம் வீசும் சமூகக் கவிதைகளின்
 சொந்தக்காரனான காரியப்பர் 2006.02.16 ஆம் திகதி இறையடி எய்தினார்
. மறைந்தும் நிழலாக வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னாரை 
கவிதைகளால் நினைவு கூர்வோம்.


No comments:

Post a Comment